காலையில் சூரியன் உதிப்பதற்கும், மாலையில் சூரியன் மறைவதற்கும் இடைப்பட்ட நேரத்தில் ஆறு நாழிகைக்கு ஒருமுறை சுவாமி வண்ணம் மாறுகின்றார். நிறங்கள் ஓர் ஐந்துடையாய் என்னும் மாணிக்கவாசகரின் வாக்கிற்கிணங்க இறைவன் ஐந்து முறை நிறம் மாறுகின்றார். அதனால் இறைவன் 'பஞ்சவர்ணேஸ்வரர்' என்ற திருநாமத்துடன் சதுர வடிவ ஆவுடையுடன், லிங்க வடிவில் காட்சி தருகின்றார்.
காலை 6 மணி முதல் 8.15 வரை தாமிர வண்ணத்திலும், 8.15 முதல் 11.30 வரை இளஞ்சிவப்பு வண்ணத்திலும், 11.30 முதல் மதியம் 2.30 வரை உருக்கிய தங்க வண்ணத்திலும், 2.30 முதல் மாலை 5 மணி வரை நவரத்தின பச்சை வர்ணத்திலும் 5 மணி முதல் 6 மணி வரை செம்மை வண்ணத்திலும் காட்சி தருவதாக தலபுராணம் கூறுகின்றது.
சிவபெருமான் அகத்தியருக்கு திருமணக் காட்சியைக் காட்டியருளிய தலம். அதனால் இத்தலத்து இறைவன் 'கல்யாண சுந்தரேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார். மூலவரின் பின்புறம் சுவாமி அம்மையப்பராக காட்சி தரும் திருவுருவம் உள்ளது. திருமாலும், பிரம்மாவும் இருபுறமும் உள்ளனர். மூலவரின் அருகில் அகத்தியர் பூசித்த சிறிய சிவலிங்கம் ஒன்றும் உள்ளது. அம்பிகை 'கல்யாண சுந்தரி' என்றும் 'திரிபுரசுந்தரி' என்றும் வணங்கப்படுகின்றாள். இக்கோயிலில் சாளக்கிராமத்தில் செய்ய விநாயகர் திருவுருவச் சிலை ஒன்றும் உள்ளது.
முசுகுந்த சக்கரவர்த்தி இந்திரனிடம் இருந்து பெற்ற வீதிவிடங்கப் பெருமானை திருவாரூருக்குக் கொண்டு செல்லும் வழியில் மூன்று நாட்கள் இத்தலத்தில் தங்கியிருந்தாகக் கூறப்படுகிறது. கோச்செங்கட்சோழ கட்டிய மாடக்கோயில்களுள் இக்கோயிலும் ஒன்று.
தமக்கு திருவடி தீட்சை அளிக்க வேண்டும் என்று பட்டீஸ்வரத்திற்கு அருகில் உள்ள திருச்சத்திமுற்றம் தலத்தில் அப்பர் வேண்ட, 'நல்லூருக்கு வா' என்று இறைவன் அசரீரியாகக் கூறினார். அதன்படி இத்தலத்திற்கு வந்த அப்பருக்கு சுவாமி திருவடி தீட்சை அளித்த தலம்.
அமர்நீதி நாயனாரை ஆட்கொண்டு, அவருக்கும், அவரது மனைவி மற்றும் மகனுக்கு சிவபெருமான் முக்தி கொடுத்தத் தலம். பிருங்கி முனிவர் வழிபட்ட தலம். இக்கோயிலின் தீர்த்தமான சப்தசாகர தீர்த்தம் ஏழு கிணறுகளைக் கொண்டுள்ளது. இது ஏழு கடல்களைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் இதில் நீராடினால் ஏழு கடல்களிலும் நீராடிய பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமை, மாசி மகம் போன்ற நாட்களில் நீராடுவது சிறப்பானது.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழால் போற்றிப் பரவியுள்ளார்.
திருஞானசம்பந்தர் மூன்று பதிகங்களும், திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்களும் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|